Sunday, August 9, 2009

பன்றிக் காய்ச்சல்

இந்த கட்டுரை ஒரு தமிழ் வெப்தளத்தில்
பதியப்பட்டிருந்தது, படித்தேன் இதை ஒவ்வொரு பன்றிக் காய்ச்சல் -
உலக நாடுகளையே இன்று கலங்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் கொடிய நோயின்
பெயர் இது.
கடந்த ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல் (சிக்குன் குன்யா) என்ற நோய் உலகளவில்
பல்லாயிரக் கணக்கான மக்களை வாட்டி வதைத்ததை போல், இந்த ஆண்டில் பன்றிக்
காய்ச்சல் நோய் உலக மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.
முதன் முதலில் மெக்சிகோ நாட்டில் உருவானதாக கூறப்படும் இந்த கொடிய நோய்,
பின்னர் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, தற்போது இந்தியாவின் புனே நகரை
சேர்ந்த ரியா ஷேக் என்ற 14 வயது பள்ளி மாணவியின் உயிரை பறிக்கும்
அளவுக்கு பரவியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சியடைந்துள்ள
சூழ்நிலையில், இந்நோய் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும்,
அதிலிருந்து நம்மை நாமே வருமுன் காப்பதும் அவசியமாகிறது.
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?
பன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி,
இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1
N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி,
கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க
வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை
மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது.
கடந்த 1930ம் ஆண்டுகளில் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய்
கண்டறியப்பட்டது. நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, இந்த வைரஸ்
மிக அரிதான ஓர் மரபு அணு தொகுதியை கொண்டிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள்
பெரும் ஆச்சரியமும், கடும் அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போதே இந்த
பன்றிக் காய்ச்சல் வைரஸ் மிக அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம்
எச்சரிக்கை விடுத்தது. பின்னர் கடந்த 1965ல் ஐரோப்பாவிலும், 1976ம்
ஆண்டில் நியூஜெர்ஸியிலும் இந்நோய் கண்டறியப்பட்டது.
பன்றிக் காய்ச்சல் பரவும் முறை:
H1N1 வைரஸ், ஓர் பன்றியில் இருந்து மற்றொரு பன்றிக்கு வேகமாக பரவுகிறது.
நீண்டகால முயற்சிக்கு பின்னர் மனிதரை தாக்குதகிறது. ஆனால்,
மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது.
பன்றிகள் வசிக்கும் இடம் அல்லது பன்றி பண்ணைகளில் பணிபுரிபவர்களுக்கு
இந்நோய் பரவி, அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது.
ஆனால், பன்றி இறைச்சி சாப்பிடுவதன் மூலமாக நோய் பரவ வாய்ப்புகள் இல்லை.
குளிர் மற்றும் பனிக்காலங்களிலுமே மிக அதிகமாக பரவுகிறது. குறிப்பாக இந்த
நோய்த் தொற்றுக்குள்ளாகி 5 முதல் 6 நாட்களில் பிறரையும் தொற்றுகிறது.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்:
உடல் சூடாதல்,
உடல் பலவீனம்,
வலி,
தொண்டைப் புண்,
இருமல்,
பசியின்மை,
வயிற்றுப்போக்கு,
வாந்தி
போன்றவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள்:
மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.
நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து
விலகியிருப்பது நல்லது.
பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக்கொள்ள
வேண்டும்.
கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க
வேண்டும்.
உலகளவில் பன்றிக் காய்ச்சல்:
கடந்த ஜூன் 11ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தால் கொள்ளை நோயாக
அறிவிக்கப்பட்ட இந்த பன்றிக் காய்ச்சல் நோய், உலகம் முழுவதும் வேகமாக
பரவி வருகிறது. இதனால், இந்நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் விமான
நிலையங்களிலும் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மருத்துவப் பரிசோதனைகள்
நடைபெற்று வருகிறது.
பன்றிக் காய்ச்சல் நோய் பற்றிய பாதிப்புகளை உலக சுகாதார நிறுவனம்
அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 34
ஆயிரத்து 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 816 பேர்
பலியாகியுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
உலகளவில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்நோயால் அதிகம்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புள்ள நாடுகளுக்கு
செல்ல வேண்டாம் என பல நாடுகள் தங்களது நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்:
இந்தியாவில் கடந்த 2004ம் ஆண்டே டெல்லி, மிசோரம், மேற்கு வங்கம் போன்ற
மாநிலங்களில் இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டன. இதனால், இந்நோயால்
ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்திருந்த மருத்துவத் துறையினர், எச்1 என்1
வைரஸ் மனிதர்களை தாக்கும் முன்பே, பன்றிக் காய்ச்சல் நோயை
கட்டுப்படுத்திவிட்டனர்.
எனினும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் மூலம்
இந்தியாவுக்குள்ளும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவ ஆரம்பித்தது.
மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 135 பேரும், டெல்லியில் 109 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 3ம்
தேதி நிலவரப்படி 574 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்க்கு புனே மாணவி ரியா ஷேக் பலியானதன் எதிரொலியாக, இந்தியாவில்
பன்றிக் காய்ச்சலை தடுக்க புதிய திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
புனேவில் பன்றிக் காய்ச்சல்:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்ட போதிலும்,
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே நகரம் தான் பன்றிக் காய்ச்சல் நோயின்
தலைநகராக விளங்கி வருகிறது.
இங்குள்ள ஓர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்
பயணம் சென்று வந்ததாகவும், அவர்கள் மூலமாக பிற பள்ளி மாணவர்களுக்கும்
இந்நோய் தொற்றியதாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில்,
அங்குள்ள பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் பலியாக புனே நகரை
சேர்ந்த ரியா ஷேக் என்ற 14 வயது நிரம்பிய பள்ளி சநேற்று முன்தினம்
பலியானார். பெற்றோரின் கவனக்குறைவு மற்றும் மருத்துவர்கள் முன்கூட்டியே
நோயை கண்டறிந்து முறையாக சிகிச்சை அளிக்காதது போன்றவையே ரியாவின்
மரணத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
நோய் தொற்றிய 20 தினங்களில் மாணவி ரியா, பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி
இருப்பது மருத்துவ உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல்:
பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்திலும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருவது. இந்நோயால் இதுவரை 35 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புனே மாணவி ரியா பலியானதன் எதிரொலியாக, தமிழக அரசும் பன்றிக்காய்ச்சல்
நோய் ஒழிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
இதுகுறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. விமானப் பயணிகள்
மட்டுமின்றி, ரயில் மற்றும் கப்பல் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கும்
மருத்துவப் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, மும்பை, புனே நகரங்களுக்கு தமிழகத்தில் இருந்து யாரும் செல்ல
வேண்டாம் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்
கல்லூரி ஆகியவற்றில் பன்றிக் காய்ச்சல் பற்றிய மருத்துவப் பரிசோதனை
நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை நகரில், தண்டையார் பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனை,
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை பெரிபரல் மருத்துவமனை
போன்றவற்றில் பன்றிக் காய்ச்சலுக்கான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.

--
Sent on a phone using T9space.com

--
Sent on a phone using T9space.com
  • rss
  • Del.icio.us
  • Digg
  • Twitter
  • StumbleUpon
  • Reddit
  • Share this on Technorati
  • Post this to Myspace
  • Share this on Blinklist
  • Submit this to DesignFloat

0 comments:

Post a Comment